விளையாட்டு செய்திகள் முதல்வர் கோப்பை விளையாட்டு சென்னை வீரர்கள் தொடர் ஆதிக்கம்

சென்னை:முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகளின் பதக்கப் பட்டியலில், சென்னையின் ஆதிக்கம் தொடர்கிறது.

தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவின் கீழ் நடக்கின்றன.

இதில், தடகளம், நீச்சல் மற்றும் அணிகளுக்கான போட்டி என, மொத்தம் 36 விளையாட்டுகளில் தமிழகம் முழுதும் மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக 11,56,566 வீரர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான இறுதிச் சுற்றுக்கு 33,000 வீரர்கள் தேர்வாகினர்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் இறுதி சுற்று போட்டிகள் துவங்கின. ஏழாம் நாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் தொடர்ந்து சென்னை மாவட்ட அணி முதலிடத்தில் உள்ளது. சென்னை மாவட்ட அணி 10 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என, மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளது.

ஈரோடு மாவட்ட அணி, 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 14 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்திலும், செங்கல்பட்டு அணி 6 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பள்ளி மாணவியருக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில், சென்னை வீராங்கனையர் தியா, ஆதிரை முறையே தங்கம், வெள்ளி வென்றனர். இதில் செங்கல்பட்டு வீராங்கனை அஸ்வித்ரா வெண்கலம் வென்றார்.

பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, கோவை அணி தங்கம் வென்றது. தூத்துக்குடி அணி வெண்கலம் கைப்பற்றியது.

போட்டிகள், 24ம் தேதி முடிவடைகின்றன.

Advertisement