120 சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு பயிற்சி தரப்படாமல் இழுத்தடிப்பு * நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக கொதிப்பு

மதுரை: மதுரையில் 120 போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு பயிற்சி தரப்படாமல் இழுத்தடிப்பதால் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.

போலீஸ் பணியில் கிரேடு 2 ஆக பணியில் சேருபவர்களுக்கு சர்வீஸ் அடிப்படையில் 10 ஆண்டுகளில் கிரேடு 1, 15 ஆண்டுகளில் ஏட்டு, 25 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு தரப்படும் அடிப்படை பயிற்சி, கள பயிற்சி அளிக்கப்பட்ட பின் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு தகுதி பெறுகின்றனர். வெளிமாவட்டங்களில் உரிய நேரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு 'நேரடி' எஸ்.ஐ.,யாக தகுதி பெற்று பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் மதுரை நகரில் 120 சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு 'நிர்வாக காரணங்களுக்காக' பயிற்சி அளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இவர்கள் 1993ல் போலீஸ் பணியில் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பின் சேர்ந்த வெளிமாவட்ட போலீசார் பயிற்சி பெற்று இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான தகுதி பெற்றுள்ளனர். சட்டம், கவாத்து உள்ளிட்ட பயிற்சிகள் பெற்றுவிட்டால் நேரடி எஸ்.ஐ., போன்று பணியாற்ற முடியும். ஆனால் அதற்கேற்ப காலி இடம் இல்லை எனக்கூறி பயிற்சி அளிக்கப்படாமல் உள்ளது.

சிறப்பு எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: பதவி உயர்வு என்பதற்கு ஒவ்வொரு போலீசின் கனவு. மற்ற மாவட்டங்களில் அது நனவாகும் போது இங்கு மட்டும் கனவாகவே உள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட மாதங்களில் பயிற்சி அளித்து தகுதி அடிப்படையில் காலி இடமுள்ள மாவட்டங்களில் நியமிக்கலாம். அல்லது விருப்பமான மாவட்டங்களை கேட்டு இடமாறுதல் செய்யலாம். இதன்மூலம் பயிற்சி பெற்ற அனைவருக்கும் உரிய பணியிடம் கிடைக்கும். இல்லாதபட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு கூறினர்.

Advertisement