அறிவாலயம் செல்வோருக்கு அறிவு குறைபாடு என கல்வெட்டு வைக்கலாமா?

1

சென்னை,: “அறிவாலயம் முன், அறிவாலயத்திற்கு செல்பவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள் என்றும்; தி.க., அலுவலகம் முன், திடலுக்கு செல்வோர் மூளை குறைபாடு உடையவர்கள் என்றும் கல்வெட்டு வைத்தால், அதை அவர்கள் ஏற்று கொள்வரா,” என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:



திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக ஈ.வெ.ரா., சிலை உள்ளது. அதில், 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, முட்டாள்' என வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன.

நீதிமன்ற கருத்து



இதுதொடர்பாக, சினிமா 'ஸ்டன்ட்' இயக்குனர் கனல் கண்ணனின் வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, 'கோவிலுக்கு முன், கடவுளை வணங்க செல்வோர் இருக்கிற இடத்தில் இந்த வாசகங்கள் அவர்களின் மனதை புண்படுத்தும் வித்தில் இருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதன் அடிப்படையில் ஈ.வெ.ரா., சிலையை மாற்றி அமைக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைத்து, கோவிலுக்கு வருவோரை திட்டும் வாசகம் இருக்கக்கூடாது.


கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து உடனடியாக ஈ.வெ.ரா., சிலை அகற்றப்பட வேண்டும்.



வேண்டுமானால், தி.க.,வினர் சொந்தமாக நிலம் வாங்கி, அங்கே ஈ.வெ.ரா. சிலையை வைத்துக் கொள்ளட்டும். அதிலும்கூட, கடவுளுக்கு எதிரான வாசகங்கள் இருக்கக்கூடாது.


அறிவாலயம் முன், 'அறிவாலயத்திற்கு செல்பவர்கள் அறிவு குறைபாடு உடையவர்கள்' என்றும்; தி.க.,வுக்கு சொந்தமான பெரியார் திடலுக்குச் செல்வோரை, 'மூளை குறைபாடு உடையவர்கள்' என்றும் கல்வெட்டு வைத்தால், அவர்கள் ஏற்று கொள்வரா.

யோசிக்க வேண்டும்



ஈ.வெ.ரா., சிலை குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் தற்போது வந்திருக்கிறது. இதை தமிழகம் யோசித்து பார்க்க வேண்டும்.


தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்; திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டு பேசியவர்; சுதந்திர தினம், தேசத்தின் கருப்பு தினம் என விமர்சித்தவர் ஈ.வெ.ரா.,

மதுவிலக்குக்கு எதிராக தொடர்ந்து பேசியவர் ஈ.வெ.ரா., இவரைப் பற்றிய பாடம் தமிழக பள்ளி மாணவர்களுக்கு படிக்கக் கொடுக்கப்படுவதும், இவரைப் போற்றும் வகையிலான சிலைகள் ஊர் முழுக்க வைக்கப்படுவதுமான நிலை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.


அதன் முதல் கட்டமாக, ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வெ.ரா., சிலை அங்கிருந்து விரைவில் அகற்றப்படும். அதற்காக, மிகப்பெரிய போராட்டத்துக்கு தயாராகி வருகிறோம். அதற்குள், அரசே முன் நின்று ஸ்ரீரங்கத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement