சென்னையில் 10,000 பேர் மீட்பு பணிக்கு தயார்

3



வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின், அவர் கூறியதாவது:

கடந்தாண்டு மழை வெள்ளம் தேங்கியதால், பல இடங்களில், உணவு, பால், பால் பவுடர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் உள்ள பேரிடர் மீட்பு மையங்களில் முன்கூட்டியே, அவற்றை இருப்பு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



நீர்நிலைகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் உள்ளன. நீர்நிலைகளுக்கு வரும் உபரிநீரை பாதுகாப்பாக அப்படியே வெளியேற்ற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் 10 செ.மீ., குறையாமல் மழை பெய்யும். சில இடங்களில் 20 செ.மீ., மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது; எங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது என்ற விபரங்களை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், 24 மணி நேரமும் அதிகாரிகள் இருப்பர்.



பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. துறைகளில் உள்ள நிதிகளை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும் பட்சத்தில் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ய, முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார். சென்னையில் 10,000 பேரும், தமிழகம் முழுதும் 65,000 தன்னார்வலர்களும், மீட்புப் பணிகளில் ஈடுபடத் தயாராகவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement