ஊடகத்தினருக்கு பயந்து காரில் முடங்கிய முதல்வர் மனைவி

மைசூரு: விஜயதசமியையொட்டி, முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி, சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தார். ஊடகத்தினருக்கு பயந்து, காருக்குள்ளேயே முடங்கினார்.


பொதுவாக அரசியல்வாதியின் மனைவி, அரசியலில் கணவருக்கு உதவியாக இருப்பர். தேர்தல் நேரத்தில் பிரசாரத்திலும் ஈடுபடுவர். அரசு நிகழ்ச்சிகளோ அல்லது தனியார் நிகழ்ச்சிகளோ, தங்கள் மனைவியை அரசியல்வாதிகள் அழைத்து வருவர்.

ஆனால் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, இந்த விஷயத்தில் மாறுபட்டவர். பொது இடங்களில் தென்பட்டது இல்லை. தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்றது இல்லை.

முதல்வரின் மனைவி எப்படி இருப்பார் என்பதே, பலருக்கும் தெரியாது. பல முறை சட்டசபை கூட்டத்திலும் கூட, இது பற்றி சுவாரஸ்ய விவாதம் நடந்த உதாரணங்கள் உள்ளன.



முதல்வரும், தன் மனைவியை வெளி உலகுக்கு அழைத்து வந்ததில்லை. ஆனால் முடாவில் இவரது மனைவிக்கு விதிமீறலாக 14 மனைகள் வழங்கியதாக, குற்றச்சாட்டு எழுந்த பின், மனைவி பார்வதியின் பெயர் அவ்வப்போது, ஊடகங்களில் அடிபடுகிறது. இதனால் அவர் தர்ம சங்கடத்துக்கு ஆளாகி உள்ளார்.


விஜயதசமியையொட்டி, தன் மருமகள் ஸ்மிதா ராகேஷுடன், மைசூரு சாமுண்டி மலையின், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பார்வதி சித்தராமையா, நேற்று காலை காரில் வந்திருந்தார். சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தார்.

மலையில் இருந்து இறங்கியபோது, வழியில் உற்சவ தேவி விக்ரஹம் வந்தது. முதல்வரின் மருமகள் ஸ்மிதா, காரில் இருந்து தேவியை வணங்கினார்.



ஆனால் முதல்வரின் மனைவி பார்வதி, ஊடகத்தினருக்கு பயந்து காருக்குள் இருந்தே, தேவியை வணங்கினார். ஊடகத்தினர் கேமராவை கண்டதும், முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டார்.

Advertisement