சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' இல்லை; தரிசனம் 18 மணி நேரமாக அதிகரிப்பு

சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 24 மணி நேரம் வரை காட்டுக்குள் சிக்கி உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.


இது கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பல்வேறு மாநில முதல்வர்கள் அவரை தொடர்பு கொண்டு, சபரிமலையில் போதுமான வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தினர்.


இதனால், இந்த ஆண்டு சீசனில் கேரள அரசு ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அனைத்து பக்தர்களையும் 'ஆன்லைன்' முன்பதிவில் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் எருமேலி, நிலக்கல் போன்ற இடங்களில் இருந்த 'ஸ்பார்ட் புக்கிங்' வசதி இனி இருக்காது என, தெரிவிக்கப்பட்டது.



இதற்கு கேரளாவில் காங்., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பந்தள அரண்மனையும் எதிர்ப்பு தெரிவித்தது.


சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை குறைப்பதிலேயே குறியாக இருப்பதாக, பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து செய்யப்பட்டதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. எனினும், கேரள அரசின் முடிவின்படி, 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, அதன் தலைவர் தெரிவித்தார். இதனால், தேவையற்ற நெரிசலையும், நீண்ட நேர காத்திருப்பையும் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், சபரிமலையில் தரிசன நேரத்தை தினமும், 18 மணி நேரமாக தேவசம்போர்டு அதிகரித்துள்ளது. இதன்படி, சீசனில் அதிகாலை, 3:00 முதல், மதியம், 1:00 மணி வரையிலும், மதியம், 3:00 முதல் இரவு, 11:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பக்தர்கள் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் தரிசனம் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement