திருமூர்த்தி அணையில் தனியார் அத்துமீறல்; ஆக்கிரமிப்பு அகற்றி அகழி அமைப்பு

உடுமலை : உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்தி அணை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில், அத்துமீறி நுழைந்து செயல்பட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.



திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில், வணிக ரீதியில் செயல்படும் 'கேம்ப் ஸ்பிளன்டர் நேஷனல் அட்வென்சர்ஸ் பவுண்டேசன்' என்ற அமைப்பு, அத்துமீறி நுழைந்து, அணை நீர் தேங்கும் பரப்பில், சாகச விளையாட்டு, பொழுதுபோக்கு, கேளிக்கை கட்டமைப்புகளை நிறுவி செயல்பட்டு வந்தது.

இந்த செயல், பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் மற்றும் 5 லட்சம் மக்கள் பயன்பெறும் குடிநீர் ஆதாரமாக உள்ள திருமூர்த்தி அணை சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.

வனப்பகுதியில் அணை அமைந்துள்ள நிலையில், புள்ளி மான், காட்டுப்பன்றிகள், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் குடிக்க வரும் பகுதியில் இந்த கட்டமைப்புகள் உள்ளதால், அணை மீன்கள், வனச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள், தளி போலீசில் கொடுத்த புகார் குறித்து கடந்த, 6ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மேலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம், பி.ஏ.பி.,விவசாயிகள் தரப்பில், அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பி, போராட்டங்களை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீர்வளத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், அணை நீர் தேங்கும் பரப்பிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

நேற்று, அணையினுள் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தனியார் நிறுவனம் அமைத்திருந்த, கட்டுமானங்கள், விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை தாமாக முன்வந்து அகற்றிக்கொண்டது. தொடர்ந்து, அணைக்குள் நுழையாதவாறு, மிகப்பெரிய அகழி அமைக்கப்பட்டது.

நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அணை பாதுகாப்பு சட்டப்படி, தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நீர் வளத்துறை அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து செயல்பட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். புதை குழிகள் அதிகம் உள்ள ஆபத்தான பகுதிகள் அணையினுள் உள்ளன. இந்நிலையில், அணைக்குள் அத்துமீறி நுழைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement