அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய் உடைப்பு :

திருப்பூர் : 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.



கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு, நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கி.மீ., நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது; ஆறு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர் சார்பில் கட்டுமான பணி முடிக்கப்பட்டு,பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ''திட்டம் மூலம் பல ஆண்டுகளாக நிரம்பாத குளம், குட்டைகள் கூட நிரம்பி வருகின்றன என்பது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், 5வது நீரேற்று நிலையம் சார்ந்த வரப்பாளையத்தில் இருந்து, புலவர் கருக்கம்பாளையம் குளம், திருப்பூர் மாவட்டம், அவிநாசி துலுக்கமுத்துார் வழியாக வரக்கூடிய பிரதான கிளை குழாயில் அடிக்கடி ஏற்படும் உடைப்பால், 27 குளம், குட்டைகளுக்கான நீர் செறிவூட்டல் பணி தடைபடுகிறது. இக்குழாயில் குறிப்பிட்ட இடத்தில் 'வால்வு' அமைத்தால், குளம், குட்டைகளுக்கு தடையின்றி நீர் வினியோகம் செய்ய இயலும்'' என்றார்.

Advertisement