ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதில் இந்தியா நான்காமிடம்! ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் தகவல்

1

போத்தனுார்: கோவை, கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின், 22வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார்.


கல்லுாரி முதல்வர் பொற்குமரன் வரவேற்றார். கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் சுந்தரராமன் உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலை தர வரிசையில் இடம் பிடித்த 34, முதுகலை முடித்த 126 மற்றும் இளங்கலை முடித்த 1099 பேர் என மொத்தம், 1235 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.


அதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தலைவர் சீதாராம் பேசுகையில், ''தேசிய அளவில் தமிழகத்தில் உயர் கல்வி விகிதம் சிறந்து விளங்கு கிறது. ரோபாட்டிக்ஸ் புதிய வழிகளில் பல்வேறு தொழில்களுக்கு ஆதரவளித்திறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டுரை சமர்ப்பிப்பதில் உலகில் நான்காவது இடத்தில் நம் நாடு உள்ளது. ஐந்தாமிடத்தில் உள்ள பொருளாதாரத்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வர, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது,'' என்றார்.


'கிராமங்களிலும் டிஜிட்டல் மாற்றம்'

ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் நிருபர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும் பல லட்சம் பேர் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் பேராசிரியர்களாக உள்ளனர். 600 பேர் போலி பேராசிரியர்கள் என்பது குறைதான். மாநில அரசு அமைத்துள்ள கமிட்டியில் நாங்களும் உறுப்பினராக உள்ளோம்; கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக கல்வி தரமிக்கதாக உள்ளது. மாணவர்களுக்கு நடத்தப்படும் ஸ்மார்ட் ஹேக்கத்தான் ஒரு பிரச்னையை தீர்க்க உதவுகிறது. மாணவர்கள் எங்களுக்கே பல்வேறு தீர்வுகளை தருகின்றனர். கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும் விரைவில் மாணவர்கள் வேறு துறைகளில் தங்கள் கவனத்தை திருப்புவர். இன்ஜி., கல்லுாரிகளில் சேர்க்கை தேசிய அளவில், 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கட்டுமான துறையில் ஏ.ஐ., (செயற்கை நுண்ணறிவு) முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில், 45 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கின்றன; கிராமப்புறத்திலும் டிஜிட்டல் மாற்றம் ஊடுருவியுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement