கோவையில் கத்தி போடும் திருவிழா ரத்தம் சிந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன்

கோவை : கோவையில் நேற்று நடந்த கத்தி போடும் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ரத்தம் சிந்தி சவுடேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.


கோவை, ராஜவீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.


ஆர்.எஸ்.புரம் லட்சுமி கணபதி கோவிலில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கத்தியால் உடலை காயப்படுத்தி, ரத்தம் சிந்தியபடி, 'வேசுக்கோ... தீசுக்கோ...' என்ற முழக்கத்துடன், ராஜ வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வந்தடைந்தனர். கத்தியால் உடலை கீறிக் கொண்டதால், பக்தர்களின் உடலில் இருந்து ரத்தம் வடிந்தது. அக்காயங்கள் மீது திருமஞ்சனப் பொடியை வைத்து, நடனம் ஆடிக்கொண்டும், பாடியும் அம்மனை வழிபாடு செய்தனர்.

ராஜவீதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''இது, 400 ஆண்டுகள் பழமையான திருவிழா.

பக்தர்கள் கத்தியால் உடலை காயப்படுத்தி, ரத்தம் சிந்தி அம்மனை அழைத்து வருவது வழக்கம். தேவாங்கர் சமூகத்தவர்கள் பெரும்பான்மையாக பங்கேற்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.'' என்றார்.

Advertisement