வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் : வானிலை மையம் கணிப்பு

1

சென்னை: '' வடகிழக்கு பருவமழை அக்., 15, 16 ல் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு இயல்பை விட அதிகம் பெய்யக்கூடும், '' என வானிலை மையம் கூறியுள்ளது.


சென்னையில் நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டி: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இன்று காலை தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தொடர்ந்து அந்த பகுதியில் நீடிக்கிறது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலில் நிலை கொள்ளும்.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நேற்று வலுப்பெற்று ஓமன் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால், 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை,



டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

நாளை (அக்.,15) டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி



வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

17 ம் தேதி



வட மேற்கு மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை



குமரி கடல், தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடல், தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல் 18 ம் தேதி வரை செல்ல வேண்டாம்.

வட கிழக்கு பருவமழை



அக்.,15, 16 தேதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்த மழையால், கேரளா, தமிழகம், தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகள் அதிக பலன் பெறக்கூடியது. பருவமழை காலங்களில் பெய்யும் மழையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மழை குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் இட அமைப்பை பொறுத்து பாதிப்பு ஏற்படும். பருவமழை என்பது இயற்கை நிகழ்வு. அதற்காக பயப்பட வேண்டாம். மழை காலத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டுமோ அந்த இயற்கையை நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Advertisement