லடாக் பாங்கோங் ஏரி அருகே கட்டுமானங்களை உருவாக்கும் சீனா!

6

புதுடில்லி: இந்திய எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், பாங்கோங் சோ ஏரி வடக்கு பகுதியில் ஏராளமான உள்கட்டமைப்புகளை சீனா ஏற்படுத்தி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.


லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 2020ம் ஆண்டு இந்தியா சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


மோதல் ஏற்பட்ட காலகட்டத்தில் லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் பாங்கோங் சோ ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது.


இதனை இந்திய ராணுவம் முறியடித்ததுடன், அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து 4,270 மீ., உயரத்தில் அமைந்துள்ளது.


இந்நிலையில், இந்த பகுதியை அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்து உள்ளது. அந்த புகைப்படத்தின் மூலம் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, பாங்கோங் சோ ஏரி அருகே 17 ஹெக்டேர் அளவுக்கு சீன கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. 4,347 மீட்டர் தூரம் சாலை அமைத்துள்ளதுடன், கருவிகளையும் அப்பகுதியில் நிறுவி வைத்து உள்ளது.

இது தொடர்பாக தட்சசீலா நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் நித்தியானந்தம் கூறியதாவது: இப்பகுதியில் சீனா 100க்கும் மேற்பட்ட கட்டடங்களை எழுப்பி உள்ளது. அதில் குடியிருப்புகள், பெரிய நிர்வாக கட்டடங்கள் அடங்கும். திறந்த வெளி மைதானங்கள், எதிர்காலத்தில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க தேவையான இடத்தையும் சீனா அங்கு ஏற்படுத்தி உள்ளது. ஏரியில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 150 மீ., தூரத்திற்கு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு வசதியாக நிலத்தை தயார்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


கட்டுமான பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கி உள்ளதாகவும், இந்த பகுதியை நிர்வாகம் மற்றும் நடவடிக்கை மண்டலம் என இரண்டாக பிரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாடி கொண்ட கட்டடங்களுடன் அருகில் 6 அல்லது 8 பேர் தங்கும் வகையிலான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement