அவங்களை நம்பாதீங்க மக்களே...! இ.பி.எஸ்., சொன்ன மெசேஜ்

22

சென்னை: கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தி.மு.க., அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன் எச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்த விதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் தி.மு.க., அரசு செயலிழந்து நிற்கிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதல்வர் ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதல்வர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

மழை, வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதல்வராகி உள்ள ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு குறியாக உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து தி.மு.க., அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை மாநகர மக்கள் அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.

தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.

Advertisement