பீ.பி.குளம் கண்மாய் கால்வாய்க்குள் 592 வீடுகள்
மதுரை : மதுரை பீ.பி.குளம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்க்குள் கட்டப்பட்டுள்ள 592 வீடுகளை நீர்வளத்துறை அகற்றுமாறு கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் கடந்த மாதம் இறுதியில் பெய்த தொடர் மழையால் ஆனையூர் கண்மாய் தொடங்கி அனைத்து கண்மாய்களும் நிறைந்தன. அடுத்தடுத்து கண்மாய்களுக்கு செல்ல வேண்டிய வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் மகாத்மாகாந்தி நகர், முல்லைநகர், ஆனையூர் உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டடி ஆழம் மழைநீர் தேங்கியது.
நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வெள்ளநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன்பு மதுரை பீ.பி.குளம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 592 வீடுகளை அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது வரை குடியிருப்பை காலிசெய்யவில்லை. இந்நிலையில் அக்டோபரில் பெய்த தொடர் மழை கண்மாய், வரத்து கால்வாயின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தியது.
எனவே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி நீர்வழித்தடத்தை மீட்கும்படி நீர்வளத்துறைக்கு கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார். இவர்களுக்கு ஓரிரு நாட்களில் ராஜாக்கூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றிடம் ஒதுக்கப்பட உள்ளது. நவ. 11ல் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட உள்ளன.