அரசு டவுன் பஸ்சை எதிர்பார்க்கும் மக்கள்

திருநகர்: மதுரை விளாச்சேரி மொட்டை மலைப் பகுதிக்கு அரசு டவுன் பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள், மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.

இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பொம்மை தயாரிக்கும் குடும்பத்தினர் உள்ளனர். மதுரையில் இருந்து மொட்டை மலைப் பகுதி வேளார் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, கலைஞர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல, விளாச்சேரி வரைதான் அரசுபஸ் வசதி உள்ளது.

அதன்பின் 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். எனவே இப்பகுதி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், மதுரைக்கு செல்லும் பொதுமக்கள் நுாற்றுக் கணக்கானோர் பஸ்சுக்காக 2 கி.மீ., தொலைவு நடந்தோ, ஆட்டோவிலோ விளாச்சேரிக்கு செல்ல வேண்டும்.

ஆட்டோவிற்கு செலவு அதிகமாகிறது. எனவே பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து மொட்டை மலைக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். அல்லது விளாச்சேரிக்கு வரும் பஸ்களை மொட்டமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement