தண்டவாளத்தில் திடீர் விரிசல்; 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்

திண்டிவனம்; திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக சென்றன.

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், தொழுப்பேடு அருகே உள்ள கரசங்கால் ரயில் நிலையம் அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தில் திடீர் சத்தம் கேட்டதால், ரயில்வே ஊழியர்கள், ரயில் இன்ஜின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ரயில், கரசங்கால் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள், சத்தம் கேட்ட பகுதியை ஆய்வு செய்ததில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து, உடனடியாக அதனை சீரமைத்தனர். அதனை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு, கரசங்கால் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.

இதன்காரணமாக, சென்னை - திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக சென்றன.

Advertisement