காதல் விவகாரத்தில் மாணவர் கடத்தல்; சென்னை நபர்கள் உட்பட 6 பேர் கைது
விழுப்புரம்; விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் பிளஸ் 2 மாணவரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் காமதேனு நகரைச் சேர்ந்த 17 வயது மாணவன், விழுப்புரம் நகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், கடந்த 21ம் தேதி மாலை, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மாணவி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த சிலர், மாணவனை திட்டி தாக்கியதுடன், பைக்கில் அவரை அழைத்துச் சென்றனர். நீண்ட நேரமாகியும் மாணவன் வீடு திரும்பாததால், அன்று இரவு மாணவனின் தாய், விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார்.
போலீசார், பள்ளி அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், அந்த பகுதியில் மொபைல் டவர் மூலம், பேசிய நபர்கள் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில், கடலுார் மாவட்டம், நெய்வேலி தொப்பிலியாக்குப்பத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்ரமணி மகன் விமல்ராஜ், 27; ரட்சகன் மகன் ராகுல்ராஜ்,29; சீர்காழியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுசீந்திரன்,25; விருத்தாசலம் அடுத்த ரோமாபுரியை சேர்ந்த எட்வின்ராஜ்,28; சென்னை வேளச்சேரி சத்யா நகரைச் சேர்ந்த 18 வயது மாணவர்கள் 2 பேர் சேர்ந்து, பிளஸ் 2 மாணவனை பைக்கில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. மாணவனுடன், அவர்கள் நெய்வேலியில் இருப்பதும் தெரிந்தது.
போலீசார், விமல்ராஜ் உள்ளிட்ட 6 பேரையும் பிடித்ததோடு, மாணவனையும் மீட்டு விழுப்புரத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், கடத்தப்பட்ட பிளஸ் 2 மாணவன், ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இது, அப்பெண்ணின் உறவினரான சென்னை வேளச்சேரியில் வசிக்கும் 18 வயது மாணவனுக்கு தெரிய வந்தது.
இதனால், வேளச்சேரி மாணவன், நெய்வேலி விமல்ராஜ் உள்ளிட்டோர், கடந்த 21ம் தேதி 3 பைக்குகளில் விழுப்புரத்திற்கு வந்துள்ளனர். பள்ளி அருகே காதலியிடம் பேசிக்கொண்டிருந்த பிளஸ் 2 மாணவரை, பைக்கில் அழைத்துச் சென்று, நெய்வேலியில் வைத்து, காதல் விவகாரம் குறித்து மிரட்டி உள்ளனர்.
இதனையடுத்து, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, விமல்ராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பிளஸ் 2 மாணவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.