கூட்டணியை தக்கவைக்க ஸ்டாலின் எந்த விலையும் கொடுப்பார் பா.ஜ., வேலுார் இப்ராஹிம் பேச்சு
சின்னாளபட்டி: 'கூட்டணியில் உள்ள கட்சிகளை என்ன விலை கொடுத்தும் ஸ்டாலின் தக்க வைத்துக் கொள்வார்'' என பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய பொதுச் செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.
சின்னாளபட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் நடந்த பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமில் அவர் பேசியதாவது:
தனக்கென ஒரு கொள்கை, தனிப்பாதையை உருவாக்காமல், பிற கொள்கைகளில் இருந்து கடைந்து எடுத்து நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக நீட் எதிர்ப்பு, இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் தமிழகத்தில் அரைத்துக் கொண்டு இருந்த மாவையே அவர் மீண்டும் அரைக்கத் துவங்கி உள்ளார்.
ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணால் மட்டுமே பார்ப்பதால் தி.மு.க., மட்டுமே ஊழல் கட்சியாக தெரிகிறது.
மற்றொரு கண்ணையும் திறந்தால் அ.தி.மு.க.,வும் ஊழல் கட்சி என்பது அவருக்கு தெரியும். தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் எதிர்க்க வேண்டும் என கூறுவது சுயநல அரசியலாகும்.
இது மக்களுக்கான அரசியல் அல்ல. தனித்துவ ஆட்சி என்பதால் 18 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி செய்கிறது. தமிழகத்தில் ஒரு கோடி என்ற இலக்கை நோக்கி தற்போது வரை 30 லட்சம் பேரை இணைத்துள்ளோம்.
2026 தேர்தலில் பா.ஜ., மட்டுமே 20 சதவீத ஓட்டு என்ற இலக்கை எட்டுவதை நோக்கி பயணிக்கிறோம். பா.ஜ., தலைமையிலான கூட்டணி மட்டுமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை மாநில தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
டிசம்பர் முதல் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும். தி.மு.க.,வை பிளாக்மெயில் செய்வதற்காக திருமாவளவன் நடத்திய மாநாடு உதவியது. கூட்டணியில் உள்ள கட்சிகளை என்ன விலை கொடுத்தும் ஸ்டாலின் தக்க வைத்துக் கொள்வார்.
ஒரு முறை பா.ஜ., ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.,ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். ஜல்ஜீவன், வேலை உறுதி திட்ட முறைகேடுகள் விரைவில் வெளிவரும் என்றார்.