ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.3.96 லட்சம் இழப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.3.96 லட்சம் இழந்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த மவுலிகா என்பவர், ஐ.டி., கம்பெனி வேலைக்காக ஆன்லைனில் தேடிவந்துள்ளார். அப்போது மர்மநபர் ஐ.டி. கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, வேலையை உறுதி செய்ய முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் மர்மநபர் தெரிவித்துள்ளார். இதைநம்பிய அப்பெண், 2023ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை, மர்மநபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னர், அந்த மர்மநபர் 90 முதல் 120 நாட்களுக்குள் தங்களுக்கான பணி ஆணை அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரையில் பணியாணை கிடைக்காத நிலையில், மர்மநபரையும் மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது.

இதேபோல், ஏனாம் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், தங்களுடைய எஸ்.பி.ஐ., ரிவார்டு பாயிண்டை பணமாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி, மர்மநபரிடம் தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டு விபரங்களை தெரிவித்து, ரூ.11 ஆயிரத்து 500 பணத்தை இழந்துள்ளார்.

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், ஆன்லைனில் சிகரெட் ஆர்டர் செய்து, ரூ.3 ஆயிரத்து 58 இழந்துள்ளார். ஜிப்மர் வளாகத்தை சேர்ந்த லதா சதுர்வேதுலா என்பவர், தனது நண்பர் பெயரில் அவசர தேவை என பணம் கேட்டு வந்த போலி பேஸ்புக் கணக்கை நம்பி, ரூ.12 ஆயிரம் அனுப்பி ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். முதலியார்பேட்டையை சேர்ந்த சண்முகம் என்பவர் ஆன்லைனில் மோட்டார் பம்பு ஆர்டர் செய்து, ரூ.10 ஆயிரத்து 411 செலுத்தி ஏமாந்துள்ளார்.

இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement