வீதியில் ஓடும் கழிவு நீர் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்

நரிக்குடி : நரிக்குடி வரிசையூரில் வாறுகால் வசதியின்றி வீதியில் கழிவு நீர் செல்வதால் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றனர்.

நரிக்குடி வரிசையூரில் போதிய வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி வீதிகளில் ஓடுகிறது. துர்நாற்றம், கொசு தொல்லையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வீதியில் சிறுவர்கள் விளையாடுவதால் தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளது.

மேலும் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வாறுகால் வசதி செய்து தர வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மழை நீரில் கழிவு நீர் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவுவதற்கான சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக வீதிகளில் கழிவுநீர் செல்வதை தடுக்க, வாறுகால் வசதியோ, மாற்று ஏற்பாடோ செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement