விபத்து நஷ்டஈடு வழங்காததால் காப்பீட்டு நிறுவன பொருட்கள் ஜப்தி
விழுப்புரம் : விபத்து நஷ்டஈடு வழங்காததையொட்டி, விழுப்புரத்தில் அரசு காப்பீட்டு நிறுவன பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சித்திரைச்சாவடியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சேஷாத்ரி, 30; இவர், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி பைக்கில் கோலியனுார் சென்றார்.
பின், அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு, கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றுபாலம் அருகே சென்றபோது, பின்னால் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர்மோதியது. இதில், சேஷாத்ரி படுகாயமடைந்தார். பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
விபத்து நஷ்டஈடு வழங்கக்கோரி சேஷாத்ரி கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி வழக்கறிஞர் மூலம் விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எண்.2ல் வழக்கறிஞர் துளசிங்கம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த அப்போதைய நீதிபதி பிரபாதாமஸ், பாதிக்கப்பட்ட சேஷாத்ரிக்கு சம்மந்தபட்ட காப்பீட்டு நிறுவனம் இழப்பீடாக 27 லட்சத்து 36 ஆயிரத்து 300 ரூபாய் வழங்க 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி உத்தரவிட்டார்.
காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், பாதித்த சேஷாத்ரிக்கு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 7.5 சதவீத வட்டியோடு சேர்த்து 35 லட்சத்து 97 ஆயிரத்து 56 ரூபாய் வழங்க வேண்டும். இதை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வழங்கவில்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.
இந்த தொகையை காப்பீட்டு நிறுவனம் சேஷாத்ரிக்கு வழங்காததால், நேற்று நீதிமன்ற ஊழியர்கள், விழுப்புரம் நேருஜி ரோட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்த கணினிகள், மானிட்டர்கள், பேன்கள், நாற்காலிகளை ஜப்தி செய்து, அதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.