சென்னையில் 70 பெட்ரோல் பங்க் மூடல்; பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்!

10


சென்னை: சென்னையில் 70 எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இப்போதெல்லாம், எங்கு சென்றாலும் பைக் மற்றும் காரில் செல்வது தற்போது வழக்கமாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளும் பெட்ரோல் பங்க் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 70 எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவை வாங்க வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


நீண்ட தூரம் பயணம்




பாதிக்கப்பட்ட குடியிருப்போர் கூறியதாவது: நாங்கள் பெட்ரோல் போட்டு வந்த, பங்குகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. தற்போது நீண்ட தூரம் சென்று, பைக்கிற்கு பெட்ரோல் போடுகிறேன். நான் அதிக நேரம் செலவிடுகிறேன்.


எனது வீட்டின் அருகில் உள்ள பெட்ரோல் பங்குகள் மாயமானதால், மிகவும் சிரமமாக உள்ளது. சில வாகன நிறுத்துமிடங்களாக மாறியது, மற்றவை ஷாப்பிங் அல்லது அலுவலக வளாகங்களாக மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மூடல்!




பாரிஸ் கார்னருக்கு வழக்கமாக பயணிப்பவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களில், மெட்ரோ ரயில் பணி காரணமாக மயிலாப்பூரில் ஒரு பங்க், சாந்தோமில் ஒரு பங்க், அடையாறில் உள்ள ஒரு பங்க் மூடப்பட்டன. அடையாறு பகுதியில் உள்ள பங்கில் நான் நிரப்பவில்லை என்றால், கடற்கரைச் சாலை திசையில் உயர்நீதிமன்றம் வரை பயணித்து பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பும் சூழல் நிலவுகிறது' என்று கூறினார்.

ரூ.2 கோடி




இது குறித்து சில்லரை விற்பனையாளர்கள் கூறியதாவது: நகரத்தில் எரிபொருள் விற்பனை நிலையங்களை நடத்துவது இனி சாத்தியமில்லை. பெரும்பாலான பங்குகள் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களில் உள்ளன. ரியல் எஸ்டேட் ஏற்றம் காரணமாக, நில உரிமையாளர்கள் விற்பனை நிலையங்களை காலி செய்து, வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதற்கு விரும்புகிறார்கள். புதிய பங்குகள் அமைக்க ரூ.2 கோடி செலவாகும்.


எரிபொருள் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கு நிலங்களை ஒதுக்கக் கோரி மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். குறுகிய கால குத்தகைக்கு எடுத்து பங்குகள் அமைத்தால் எந்த பயனும் இல்லை. விற்பனை ஒரளவு முன்னேறுவதற்கே, ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். சென்னையில் இருந்து வெளியே நெடுஞ்சாலையில் அதிக எரிபொருள் விற்பனை நிலையங்கள் திறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


காரணம் இதுதான்!



தொழிலாளர் மற்றும் மின் கட்டணங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து விற்பனை நிலையங்களை இயக்குவதற்கான செலவினம் அதிகரித்துள்ளது தான் பெட்ரோல் பங்குகள் மூடுவதற்கான காரணமாக கருதப்படுகிறது.

Advertisement