விளையாட்டு வீரர்களுக்கு ரூ.110 கோடி ஊக்கத் தொகை; துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
விழுப்புரம் : 'தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,350 விளையாட்டு வீரர்களுக்கு 110 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
விழுப்புரத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் அரசு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரண தொகுப்புகள், 295 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இன்று 35 கோடி ரூபாயில் வங்கிக்கடன் வழங்கப்பட்டது. இந்த மாவட்டம் உழைக்கும் மக்கள் நிரம்பிய மாவட்டம். கருணாநிதி, ஸ்டாலினுக்கும் பிடித்த மாவட்டம். திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களால் தமிழகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
அமைச்சர் பொன்முடியும், பல திட்டங்களை கூடுதலாக கேட்டு பெற்றுள்ளார். அதில் ஒன்றுதான் ஸ்போர்ட் கிட் வழங்கும் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 28 மாவட்டங்களுக்கு 33 வகையான உபகரணங்கள் வழங்கியிருக்கிறோம்.
விளையாட்டு அமைச்சராக சர்வதேச, மாநில, தேசிய போட்டிகளை தொடங்கி வைத்திருக்கிறேன். இதற்கு முன்னோடியாக, விழுப்புத்தில் 2013ல் போட்டியை தொடங்கி வைத்துள்ளேன்.
கிராம பகுதியில் இருந்து அதிகளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதால் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்களை விட பெண்கள் அதிகம் விளையாட்டிற்கு வருகிறார்கள்.
சமீபத்தில் 83 கோடி ரூபாயில் நடத்தி முடிக்கப்பட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டில், 11.56 லட்சம் பேர் பங்கேற்றனர். அதில் 5 லட்சம் பேர் பெண்கள்.
விழுப்புரத்திலிருந்து தேசிய போட்டியில் பதக்கங்களை குவித்த பரத், சங்கீதாவுக்கு வாழ்த்துகள். இவர்கள், தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,350 வீரர்களுக்கு 110 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இன்று மகளிர்கள் பலர் தொழில்முனைவோர்களாக உயர்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் தொடக்க புள்ளி வைத்தவர் கருணாநிதி. அவர்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் சுயஉதவிக்குழுவை தொடங்கினார்.
கல்வி, சுகாதாரம், மருத்துவம், உட்கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்றம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது.
திராவிடமாடல் அரசை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்து குடும்பங்களுக்கும், ஏதோ ஒருவகையில் பயன்தருகிறது. ஆனால், சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு உதயநிதி பேசினார்.