என்.எல்.சி.,யில் உள்ளூர் மக்களுக்கு வேலை விஷ்ணுபிரசாத் எம்.பி., வலியுறுத்தல்
கடலுார் : என்.எல்.சி.,யில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என, கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
கடலுார் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத், கடலுாரில், காங்., அலுவலகத்தை திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
கடலுார் துறைமுகம் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்ட வரைமுறையை தயாரித்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புற்று நோய் பாதிப்பு அதிகம் உள்ளதால் புதிதாக மருத்துவமனை கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். என்.எல்.சி., நிறுவனத்திற்கு, பல ஆயிரம் ஏக்கர் நிலம் பொதுமக்கள் வழங்கியதன் மூலமாக தொடங்கி லாபகரமாக இயங்கி வருகிறது.
ஆனால் ஏழை மக்களை கனிவுடன் பார்க்காமல் உள்ளனர். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போனதற்கு என்.எல்.சி., தான் காரணம். தற்போது 340 பேருக்கு என்.எல்.சி., சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவும் லேட்டரல் என்ட்ரி முறையில் அனுமதிக்கப்படும். என்.எல்.சி.,யில் குறிப்பிட்ட 2 மாநிலத்தவர்கள் தான் வேலையில் சேர்வது அதிகரித்து வருகிறது.
எனவே, உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு என்.எல்.சி., நிர்வாகத்திற்கு ஆதரவு தராமல் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
காங்., மாவட்டத் தலைவர் திலகர், கவுன்சிலர் சரஸ்வதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.