ஸ்ரீ ராமானுஜ சித்தாந்த சபையில் இளைஞர்களுக்கு ஆன்மிக பயிற்சி
தங்கவயல்: ஸ்ரீராமானுஜர் சித்தாந்த சபையில், இளைஞர்கள் ஆன்மிக நெறியில் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டது.
தங்கவயல் கென்னடிஸ் வட்டத்தில் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ராமர் கோவில். இக்கோவிலை பக்தி மார்க்கத்தில் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான், ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை. இக்கோவிலில் உறுப்பினர்களாக இருந்தோரின் வாரிசுகளான இளைஞர்களை ஆன்மிகப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக புதிய உறுப்பினர்களாக சேர்த்து, இளைஞர் கோஷ்டி ஏற்படுத்தப்பட்டது.
இவர்களின் கூட்டத்திற்கு, சபையின் இக்கோவிலின் உப தர்மகர்த்தாக்கள் பாண்டுரங்கன், சுந்தரம் சடகோபன், பொருளாளர் முத்துகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், தசரதன், வேலு, பழனிவேலுல செல்வ நாராயண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமானுஜர் சித்தாந்த சபையின் கோபுர மண்டபம் கட்டுதல்; சனிக்கிழமை தோறும் ஸ்ரீ ராமர் பஜனை; இதற்காக ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைக்க பயிற்சி; வைணவ முத்திரை ஸ்தானம் பெறாதோருக்கு முத்திரை ஸ்தானம்; சனிக்கிழமை தோறும் நெற்றியில் திருநாமம் தரித்து கோவிலுக்கு வருவது; மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலை 4:30 மணிக்கு திருப்பாவை, திவ்விய பிரபந்தம் ஓதுதலுக்கு பயிற்சி வகுப்பு நடத்துதல் குறித்து விளக்கினர்.
கூட்டத்தில் பங்கேற்ற 25 இளைஞர்களுக்கு வேட்டி, துண்டு அளித்தனர். கோவில் பூஜாரிகள் மேகநாதன், ஆதிகேசவன் ஆகியோர் பங்கேற்றனர்.