யானை விரட்டியதால் ஆற்றில் குதித்த வன ஊழியர் பலி

மைசூரு : பண்டிப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, யானை விரட்டியதால் கபிலா ஆற்றில் குதித்த, வனத்துறை ஒப்பந்த ஊழியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


சாம்ராஜ் நகர் மாவட்டம், பண்டிப்பூரில் புலிகள் வனப்பகுதி உள்ளது. என்.பேகூர் வனப்பகுதிக்கு உட்பட்ட பிரிவில், வனத்துறையின் ஒப்பந்த ஊழியர்களான செஷாங்க், 22, ராஜண்ணா ஆகியோர் பணியாற்றி வந்தனர்.


வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை இருவரும், வனப்பகுதியில் நடந்தே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புதருக்கு பின்னால் இருந்து திடீரென ஒற்றை யானை வந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும் அங்கிருந்து ஓடினர். அவர்களை யானை விரட்டியது.

யானையிடம் இருந்து தப்பிக்க, இருவரும் வனப்பகுதியில் ஓடும் கபிலா ஆற்றில் குதித்தனர்.

இதை பார்த்த யானை, அங்கிருந்து சென்றுவிட்டது. ஆற்றில் குதித்த ராஜண்ணா, நீச்சல் அடித்து மறுகரைக்கு வந்துவிட்டார்.

ஆனால், செஷாங்க் நீரில் மூழ்கினார். இதை பார்த்த ராஜண்ணா, ஊருக்குள் சென்று வனத்துறையினர், கிராமத்தினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வன அதிகாரி அம்ரிதேஷ் தலைமையிலான குழுவினர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செஷாங்க் உடலை மீட்டனர்.

தகவல் அறிந்த எச்.கே.கோட்டே எம்.எல்.ஏ., அனில் சிக்கமாது, செஷாங்கின் தாய்க்கு ஆறுதல் கூறி, உடனடியாக 5 லட்சம் ரூபாய் வழங்கினார். இறந்தவரின் குடும்பத்திற்கு, 30 லட்சம் ரூபாய் நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.

Advertisement