தனியார் நிகழ்ச்சிக்கு யானை அணிவகுப்பு கூடாது; கேரளா ஐகோர்ட்டில் அறிக்கை

1

கொச்சி: தனியார் விழாக்களில் யானை அணிவகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என கேரளா ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



கேரளாவில் நடக்கும் எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியாக இருந்தாலும், யானைகள் அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம். அணிவகுப்பில் யானைகள் மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு காரணம். அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது.



இது குறித்து கேரளா ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஐகோர்ட் உத்தரவுப்படி விசாரணை நடத்திய 'அமிகஸ் கியூரி' அறிக்கை, நீதிபதிகள் ஜெயசங்கரன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்டது.


அதில் கூறியிருப்பதாவது:




* யானை அணிவகுப்பு கோவில், தேவாலயம் மற்றும் மசூதி திருவிழாக்களுக்கு மட்டும் முறைப்படி உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும்.


* திறப்பு விழாக்கள் உள்ளிட்ட தனியார் விழாக்களில் யானைகள் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது.


* யானைகள் அணிவகுப்பு நடத்த மாவட்ட நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.


* அணிவகுப்பில் யானைகளுக்கும், மக்களுக்கும் இடையில் நான்கு பக்கங்களிலும் மூன்று மீட்டருக்கு குறையாமல் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.


* நோய்வாய்ப்பட்ட, பலவீனமான, காயம் அடைந்த, ஊனமுற்ற யானைகளை அணிவகுப்பில் பங்கேற்க வைக்க கூடாது.


* எந்த ஒரு யானையையும் நீண்ட தூரம் அணிவகுப்பு நடத்த உட்படுத்தப்படக்கூடாது.


* அணிவகுப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, யானைகளுக்கு 24 மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும்.


* அரசு கால்நடை மருத்துவர் அணிவகுப்பு செல்லும் யானைகளை பரிசோதித்து தகுதியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


*அணிவகுப்பு நடக்கும் 12 மணி நேரத்திற்குள் பரிசோதித்து உடற்தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.


இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement