கீழடியில் புறக்காவல் நிலையம் அவசியம்

கீழடி: கீழடியில் காவல்துறை பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியரின் கனிமவள மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட சோதனை சாவடியை புறக்காவல் நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்புவனம் காவல்நிலையத்தின் எல்லை மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. இதில் ஒருசில கிராமங்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காகவும், விபத்து, திருட்டு உள்ளிட்டவற்றிற்காகவும் மதுரை நகரை சுற்றியும் செல்ல வேண்டியுள்ளது. எனவே குறிப்பிட்ட சில இடங்களில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிலும் கீழடியில் புறகாவல்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே மாவட்ட ஆட்சியரின் கனிம வள மேம்பாட்டு நிதியின் கீழ் செட்டிநாட்டு கட்டட கலை முறைப்படி ரூ.24 லட்சம் செலவில் காவல்துறை பயன்பாட்டிற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. லாக்கப் அறை, ஆயுத அறை, எஸ்.ஐ.,க்கு தனி அறை என பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. கீழடியில் உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அவர்கள் பாதுகாப்பிற்காகவும் காவல்துறைக்கு தனி கட்டடம் கட்டப்பட்டது.

கட்டுமான பணிகள் நிறைவடைந்து இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவே இல்லை. அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரும் ஓய்வறை இன்றி சிரமப்படுகின்றனர். ஆனால் காவல்துறை சார்பில் இதனை சோதனை சாவடியாக அமைத்துள்ளனர். புறக் காவல் நிலையம் அமைத்தால் எஸ்.ஐ., தலைமையில் 10 போலீசார் வரை நியமிக்கப்படுவர்.

ஏற்கனவே கீழடியை மையப்படுத்தி கஞ்சா விற்பனை களை கட்டி வரும் நிலையில் புறக் காவல் நிலையம் அமைத்தால் ஓரளவிற்கு கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தலாம். எனவே சகல வசதிகளுடன் கட்டப்பட்ட இக் கட்டடத்தில் புறக் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement