டிரம்ப் வெற்றி எதிரொலி; உச்சம் பெற்ற பங்குச் சந்தைகள்
புதுடில்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரோல் ஓட்டுக்களில் 277 இடங்கள் வரை பெற்று குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 இடங்களில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், 47வது அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர்வை சந்தித்துள்ளன. குறிப்பாக, சென்செக்ஸ், நிப்டி ஆகியவை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24,484 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 901 புள்ளிகள் அதிகரித்து 80,378 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல, நிப்டி ஐ.டி., பங்கு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 1,614 பங்குகள் அதிகரித்து 42,039 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதேபோல, டி.சி.எஸ்., எச்.சி.எல்., டெக், இன்போஸிஸ், டெக் மஹேந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உச்சம் பெற்றுள்ளன.