டூ--வீலரில் சென்று வனப்பகுதியை ரசிக்கலாமா?
ஷிவமொக்கா மாவட்டம், ஆகும்பே கிராமத்தில் அமைந்துள்ளது பர்கனா நீர்வீழ்ச்சி. 800 அடி உயரத்தில் இருந்து நீர் விழுகிறது. நாட்டிலேயே 10வது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில், சீதா ஆற்றில் இந்த அருவி உருவாகிறது. மாநிலத்தின் முக்கியமான நீர்மின் திட்டங்களில் ஒன்றின் ஆதாரமாகும். பர்கனா என்ற பெயர் பர்கா என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அதாவது 'சருகுமான்' என்று பொருளாகும்.
கர்நாடகாவின் இயற்கை அதிசயங்களின், மிகவும் கவர்ச்சிகரமான காட்சிகளில் இந்த நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ள பர்கனா வியூ பாயின்ட், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இப்பகுதியின் மலை சரிவுகளின் மயக்கும் காட்சியை ரசிக்க ஏற்ற இடமாகும்.
மழை காலத்தில் நீரின் ஓட்டம் அதிகரித்து, வழக்கத்தை விட அதிகளவில் கொட்டும் போது, அருவி இன்னும் வசீகரமாக இருக்கும். பர்கனா நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டுமானால், கும்போ மேற்கு தொடர்ச்சி மலை வழியாக செல்ல வேண்டும்.
இச்சாலை மிகவும் சேறும், சகதியுமாக இருக்கும். எனவே, ஆகும்பே அல்லது ஹிப்ரியில் வாடகைக்கு ஜீப் எடுத்து கொள்வது அவசியம்.
மலை உச்சிக்கு செல்ல வேண்டுமானால், அடர்ந்த வனப்பகுதியில் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும். சில பயணியர் இரு சக்கர வாகனத்தில் செல்ல விரும்புவர். அதற்கான பாதையும் இங்குள்ளது. இருப்பினும், மலையேற்ற பாதை மிகவும் வழுக்கும் என்பதால், மழை காலத்தில் நீர்வீழ்ச்சியை பார்ப்பது ஆபத்தானது. கவனமாக இருக்க வேண்டும்.
தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் இந்த நீர்வீழ்ச்சியை காணலாம். ஒருவருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து பஸ், டாக்சியில் ஆகும்பே செல்லலாம். ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 53 கி.மீ., பஸ், டாக்சியில் ஆகும்பே செல்லலாம். பஸ்சில் செல்வோருக்கு, பெங்களூரில் இருந்து ஆகும்பேவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- நமது நிருபர் -