ரூ.97 லட்சத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை
ரூ.97 லட்சத்தில் வளர்ச்சி
பணிகளுக்கு பூமிபூஜை
ஓசூர், நவ. 7-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை பஞ்., உட்பட்ட அடவிசாமிபுரம் கிராமத்தில், முனீஸ்வரன் கோவில் முதல், கொரட்டகிரி சாலை வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 26 லட்சம் ரூபாய் மதிப்பில் ஓரடுக்கு ஜல்லி அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அடவிசாமிபுரம், கொரட்டகிரி, காந்தி நகர், இஸ்லாம்புரம் ஆகிய கிராமங்களில், கனிமங்களும் குவாரிகளும் திட்டத்தில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி நடக்க உள்ளது. கொரட்டகிரி, தண்டரை, ஏ.டி.,ஒன்னுப்பள்ளி ஆகிய கிராமங்களில், தளி ஒன்றிய பொது நிதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மொத்தம், 42 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மொத்தம், 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தண்டரை பஞ்., தலைவர் நீலம்மா ஜெயராமன், முன்னாள் தலைவர் துரைசாமி, சம்பங்கிராமரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.