திறந்த நிலையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி ரயில்வே சுரங்க பாதையில் தொற்று அபாயம்
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் மழைநீர் சேகரித்து வெளியேற்றப்படும் தொட்டி திறந்த நிலையில் உள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும், 230 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், 10 விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. ஆறு தண்டவாளம் உள்ள ரயில் நிலையத்தை, தினமும் ஒன்றரை லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தை ஆபத்தான முறையில் பயணியர் கடந்து வருவதை தவிர்க்க, மூன்று ஆண்டுக்கு முன் சுரங்கப்பாதை கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில், தண்ணீர் வெளியேற வழியில்லாமல் முழங்கால் அளவிற்கு தேங்குவதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர் வெளியேற்றுவதற்காக, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த தொட்டி திறந்த நிலையில் உள்ளதால், கொசு உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குழந்தைகள், வயதானோர் இந்த தொட்டியில் விழுந்து காயமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, திறந்த நிலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை இரும்பு கம்பி அமைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.