அமாவாசை, பவுர்ணமிகளில் மாயமாகும் அரசு பஸ்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தங்கள் பகுதிக்கு வரும் பஸ்களின் டிரிப்புகள் கட் செய்யப்படுவதால் வ.புதுப்பட்டி, பிளவக்கல், பெருமாள் தேவன் பட்டி, சுந்தரபாண்டியம் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் சுந்தரபாண்டியம், வ. புதுப்பட்டி, பிளவக்கல் அணை, பெருமாள் தேவன்பட்டி பகுதிகளுக்கு குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலை ஒவ்வொரு வழித்தடத்திலும் காணப்படுகிறது.

இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு பெருமாள் தேவன் பட்டி, வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், பிளவக்கல் அணை டவுன் பஸ்களின் டிரிப்புகள் கட் செய்யப்படுகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே இனிவரும் காலங்களில் குறைந்தளவு பஸ்கள் இயங்கும் வழித்தடத்தில் டிரிப்புக்கள் கட் செய்யப்படுவதை அரசு போக்குவரத்து கழகம் கைவிட வேண்டும்.

பெர்மிடபடி உரிய நேரத்தில் பஸ்கள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement