அ.தி.மு.க., பணிகளை விரைவுபடுத்த கள ஆய்வுக்குழு: பழனிசாமி அறிவிப்பு
சென்னை: கட்சியினரிடம் கருத்து கேட்பதற்காக மூத்த நிர்வாகிகள் 10 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., அமைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுக கிளை, வார்டு, வட்டக்கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்து கருத்துகளை பெறவும், கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைவரிடமும் சென்று அடைந்ததா என்பதை உறுதி செய்து அறிக்கை அளிக்க கள ஆய்வுக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி,வரகூர் அருணாச்சலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து அதன் விவரங்களை டிச.,7 க்குள் அறிக்கையாக அளிப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.