புதிய தமிழகம் தலைவர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது 

1

சென்னை:அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அனுமதியின்றி பேரணி சென்ற, புதிய தமிழகம் கட்சியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கொட்டும் மழையிலும் தரையில் அமர்ந்து போராடிய, கட்சி தலைவர் கிருஷ்ணாமி உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அருந்ததியருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும், மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி, நேற்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, புதிய தமிழகம் கட்சியினர் ஒன்று கூடினர். பின் அனுமதியின்றி பேரணியாக சென்று, கவர்னரிடம் மனு அளிக்கப் போவதாகக் கூறி கிளம்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பேரணிக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி, கிருஷ்ணசாமியும், அவரது ஆதரவாளர்களும் கொட்டும் மழையிலும் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, பேருந்தில் ஏற்றினர்.

பின், கைது செய்யப்பட்டவர்களை பேருந்தில் அழைத்துச் சென்றபோது, ஸ்பென்சர் சிக்னல் அருகே பேருந்து நின்றது. பேருந்துக்குள் இருந்தவர்கள், சட்டென கீழே இறங்கி சாலை மறியல் செய்தனர். இதனால், அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

Advertisement