கோல்கட்டா மருத்துவ மாணவி படுகொலை வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி: கோல்கட்டா பயிற்சி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி ஒய் சந்தரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர் ஒருவர், ' இந்த வழக்கின் விசாரணை விரைவில் துவங்க உள்ளது. விசாரணைக்கு இடையூறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியே நடத்தலாம். இதற்கான உதாரணங்கள் உள்ளன,' என வாதிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி கூறியதாவது: பல வழக்குகளில் விசாரணை மாநிலங்களுக்கு வெளியே மாற்றப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. அது எங்களுக்கு தெரியும். சில வழக்குகள் மணிப்பூரில் இருந்து அசாமுக்கு மாற்றியுள்ளோம். இங்கே நாங்கள் அதைச் செய்யவில்லை. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முன்பு விசாரணை தொடரட்டும். இல்லையெனில், எங்கள் சொந்த நீதித்துறையின் சட்டபூர்வமான தன்மையை நாங்கள் சந்தேகிப்படும் ஆகிவிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தார்.
மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், இந்த வழக்கை மிக விரைவாக முன்னெடுத்துச் செல்ல நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். அது மிகவும் முக்கியமானது. சம்பந்தப்பட்ட நபர் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.