கோடநாடு வழக்கில் பழனிசாமிக்கு எதிராக அவதுாறு பேட்டி அளித்தவர் ரூ.1.10 கோடி இழப்பீடு தர உத்தரவு
சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தொடர்புபடுத்தி, டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் பேச, சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. மேலும், 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டுக்கு வந்து தங்குவது வழக்கம்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், மர்ம கும்பல் ஒன்று, கோடநாடு எஸ்டேட் காவலரை படுகொலை செய்து, பங்களாவுக்குள் நுழைந்து கொள்ளையடித்தது. 2017ல் நடந்த இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர், சேலம் மாவட்டம் இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ்; இவர், சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அறிக்கை தாக்கல்
இவரது சகோதரர் தனபால், கோடநாடு வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் வெளியானது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, தனபாலுக்கு தடை விதிக்கவும், 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடினார்.
அட்வகேட் கமிஷனராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன், சாட்சியங்களை பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். தனபால் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
ஆட்சி மாறியதும், நிதி முறைகேடு வழக்கில் தனபால் கைது செய்யப்பட்டு உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
கணிசமான தொகை தேவைப்பட்டதால், பொய் என தெரிந்தும், பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி, தனபால் பேட்டி அளித்ததாக, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் முன்வைத்த வாதத்தில் அழுத்தம் உள்ளது.
பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற, தனபாலுக்கு உள்நோக்கம் உள்ளதை தெளிவாக விளக்கி உள்ளார்.
பணம் பறிப்பதற்காக, பழனிசாமியை மிரட்டும் நடவடிக்கையில் தனபால் ஈடுபட்டுள்ளார். வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, பழனிசாமிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் தனபாலின் நோக்கம் தெளிவாகிறது. வீடியோவில் இருக்கும் உள்ளடக்கம் பொய்யானது; உள்நோக்கம் கொண்டது.
குற்றச்சாட்டு
முதல்வராக பதவி வகித்தவர் பழனிசாமி. அவருக்கு எதிராக மின்னணு ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து அவதுாறான குற்றச்சாட்டுகளை சுமத்தினால், பொது மக்கள் மத்தியில் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதை ஒதுக்கி விட முடியாது. பழனிசாமியை குறிவைத்தே, தனபால் பேசிய வார்த்தைகள் உள்ளன.
வழக்கை எதிர்கொள்ளவோ, எழுத்துப்பூர்வமாக மனு தாக்கல் செய்யவோ, தனபால் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதிய அவகாசம் வழங்கியும், தனபால் தரப்பில் பதில் இல்லை. தான் பேசுவது பொய் என தெரிந்தும், பொய்யான குற்றச்சாட்டுகளை தனபால் கூறியுள்ளார்.
இப்போது யார் வேண்டுமானாலும், சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கி, செய்திகளை பதிவிடுகின்றனர். ஒருவரை குறி வைத்து, அவதுாறு பதிவு செய்து சேற்றை வீசுகின்றனர்.
வாழ்க்கை தரம் உயர, நல்ல தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கு பதில், துரதிருஷ்டவசமான விஷயங்களை வழங்கும் தளமாக உள்ளது.
ஒரு மனிதர் நடந்து செல்கிறார் என்றால், அவருக்கு முன்னால் அவரது மரியாதை செல்லும்; மரியாதை, புகழ் என்பது மனித வாழ்வில் முக்கியமான பகுதி.
அவரை தலை நிமிர்ந்து நடக்க வைக்க, அது வழி செய்யும். மணியில் இருந்து ஓசை வெளியான பின், அதை திரும்ப பெற முடியாது. அதுபோல, ஒரு மனிதரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டால், அதை திரும்ப பெற முடியாது. அதற்கு ஈடாக, இழப்பீடு தான் வழங்க முடியும்.
புகழுக்கு களங்கம்
எனவே, மனுதாரருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவரது புகழுக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு, பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்றாலும், அவர் கோரிய இழப்பீடு தொகை 1.10 கோடி ரூபாய் வழங்க, தனபாலுக்கு உத்தரவிடப்படுகிறது.
பழனிசாமிக்கு எதிராக அவதுாறாக கருத்து தெரிவிக்க, தனபாலுக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. தனபாலின் அவதுாறு பதிவை நீக்க, சம்பந்தப்பட்ட ஊடகங்களை மனுதாரர் கோரலாம். அவ்வாறு கோரும்பட்சத்தில், அவதுாறு பதிவை நீக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.