பள்ளிக்கரணை சந்திப்பில் 'சிக்னல்' இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிக்கரணை,பள்ளிக்கரணை, மாநகராட்சி அலுவலகம் அருகே, பிரதான சாலையின் முக்கிய சந்திப்பில் சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்திக்கின்றனர். தவிர, விபத்துகளும் அதிகமாக நடக்கின்றன.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
வேளச்சேரி -தாம்பரம் பிரதான சாலையில், பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகே, பிரதான மும்முனை சந்திப்பு உள்ளது.
பள்ளிக்கரணை மக்கள் பெரும்பாலானோர், இந்த சந்திப்பில் திரும்பியே தங்கள் பகுதிக்கு செல்ல முடியும்.
தினமும் பல்லாயிரம் வாகனங்கள் பயணிக்கும் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், மும்முனை சந்திப்பில், நான்கு ஆண்டுகளாக சிக்னல் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக, பிரதான சாலையில், மேடவாக்கம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், வலது பக்கம் திரும்புகையில், வேளச்சேரி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களோடு மோதி விபத்தை சந்திக்கின்றன.
அதேபோல், உட்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், பிரதான சாலையின் வலது பக்கம் திரும்பும்போதும், விபத்துகள் நிகழ்கின்றன. மும்முனை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெரும்பாலான நேரங்களில் போலீசார் இருப்பதில்லை.
இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் யார் முதலில் செல்வது என்பதில் வாகன ஓட்டிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டு, வாய் தகராறும், கைகலப்பும் அடிக்கடி நடக்கிறது. இதனால், விபத்துகளும் ஏற்படுகின்றன.
முக்கியமான மும்முனை சந்திப்பில் சிக்னல் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.