'மாஜி' இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்

சென்னை:காஞ்சிபுரத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் கஸ்துாரி, 62; ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர், 30 ஆண்டுகளுக்கு முன், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஓய்வுக்கு பின், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில், வீட்டில் இருந்த கஸ்துாரி கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்து, சிவகாஞ்சி பேலீசார் விசாரித்தனர்.

அப்போது, கஸ்துாரியின் வீட்டை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கஸ்துாரி கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கஸ்துாரியின் குடும்ப நண்பரான, ம.தி.மு.க., மாவட்ட செயலரான வளையாபதி, 65 மற்றும் அவரது நண்பரும், அ.தி.மு.க., பிரமுகருமான பிரபு, 52 ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, இவர்களை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது.

இதனால், கஸ்துாரி கொலை வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, டி.எஸ்.பி., நிலையில் உள்ள அதிகாரி விசாரணையை துவக்கி உள்ளார். அவர், ஜாமினில் வெளிவந்துள்ள வளையாபதியிடம் விசாரித்துள்ளார். அவரின் வங்கி கணக்கும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாக பிரபுவிடம் விசாரணை நடக்க உள்ளதாக, சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement