குன்றத்துாரில் சூரசம்ஹார விழா கோலாகலம்
குன்றத்துார்:குன்றத்துார் மலையில் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இங்கு கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா துவங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் உடனுறை நகைமுகவல்லி அம்பாளிடம் முருகர் சக்தி வேல் பெற்று மீண்டும் மலைக்கு எழுந்தருளினார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை சூரபத்மனை வதம் செய்ய, முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் மலையில் இருந்து கீழே இறங்கினார். இதைதொடர்ந்து மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, ஆடு, மாடு, குதிரை, புலி உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. விழா நடந்துக்கொண்டிருந்தபோத்து சிறிது நேரம் கன மழைபெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் கலைந்து செல்லாமல் சூரசம்ஹாரத்தை கண்டு ரசித்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு .முருகனை வழிபட்டனர்.
அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், அறங்காவலர்கள் சரவணன், ஞானசேகர், சங்கீதா, ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.