மாமல்லை பகுதி மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் அதிகரிப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மின்கம்பங்களில் விதிகளுக்கு புறம்பாக விளம்பர பதாகைகள் அமைப்பது அதிகரித்து வருகின்றன. இதனால், மின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளன.


மாமல்லபுரத்தில் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில், தெருவிளக்குகள் அதிகளவில் உள்ளன. வடகடம்பாடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், திருக்கழுக்குன்றம் சாலை பகுதிகளிலும், உயரழுத்த மின்தடம் செல்கிறது.

அதற்காக உள்ள மின்கம்பங்களில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், விதிகளுக்கு புறம்பாக விளம்பர பதாகை அமைத்துள்ளனர். இந்நிறுவனத்தினர் போட்டி போட்டு பதாகைகள் அமைக்கின்றனர்.

மின் இணைப்பு கோளாறு ஏற்படும்போது, மின் ஊழியர்கள் கம்பத்தில் ஏற முடியாதபடி, விளம்பர பதாகைகள் இடையூறாக உள்ளன. மேலும், பதாகை கட்டும் கம்பியில் சிக்கி காயமடைகின்றனர்.

பலத்த காற்றில் பதாகை கழன்று, சாலையில் செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மின்கம்பி பதாகையில் உரசி தீ விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.

மேலும், மின்கம்பத்தின் மேற்பகுதி மட்டுமின்றி, சாலையை ஒட்டி கீழ்புறத்திலும் அமைக்கின்றனர். மாவட்டம் முழுதும் பல பகுதிகளில், இதேநிலையே தொடர்கிறது.

எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விளம்பர பதாகைகளை அகற்றவும், மீண்டும் அமைக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement