திருத்தேரி தாங்கல் ஏரியில் குப்பை கழிவு தூர்வார செலவிடப்பட்ட 39 லட்சம் வீண்
மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில், திருத்தேரி தாங்கல் ஏரி உள்ளது.
இந்த ஏரி 2022ம் ஆண்டு 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ், 39.40 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தி ஏரிகளை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டன. ஏரியின் நடுவே, பறவைகளுக்காக மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்து, 2022ம் ஆண்டு டிச., மாதம் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளிட்டோர் ஏரியை திறந்து வைத்தனர்.
தூர்வாரப்பட்ட ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திற்க்கு கலெக்டர் திறப்பு விழாவின் போது அறிவுறுத்தினார்.
இருப்பினும், ஓராண்டாக சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.
மேலும், இந்த ஏரி ஜி.எஸ்.டி., சாலையோரத்தில் உள்ளதால், ஏரியில் இரவு நேரங்களில் பலர் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பை கொட்டி செல்கின்றனர்.
இந்த குப்பை கழிவுகளை, நாய்கள் கிளறி சாலையில் சுற்றுவதால், இந்த பகுதியை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், நெடுஞ்சாலையில் முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால், லாரி டிரைவர்கள் இயற்கை உபாதைகளை இப்பகுதியில் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புறநகரின் நுழைவு பகுதியில் சாலையோரம் திருத்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. ஏரியில் உள்ள பொது கிணறு வாயிலாக, ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யபடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஏரியில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முரளி, செங்கல்பட்டு.