நீர்யானை கூண்டுக்கு பூட்டு பூங்கா ரசிகர்கள் ஏமாற்றம்

தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவில், இரண்டு பறவைகள் கூடம் உள்ளது. இந்த கூடங்களில் ராக்கொக்கு, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்புத்தாரா உள்ளிட்ட பறவைகள் மற்றும் இந்திய புள்ளி வாத்துகள் உள்ளன.

இந்த கூடங்கள், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை என்பதால், ஒரு கூண்டு துருபிடித்தும், கம்பியால் ஆன கூரை ஆங்காங்கே பெயர்ந்தும் காணப்பட்டது.

இதையடுத்து, தனியார் நிதி, 2 கோடி ரூபாய் செலவில், அந்த கூண்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

இரும்பு குழாய்களை அகற்றி, துருப்பிடிக்காத 'ஸ்டீல்' குழாய்கள் கொண்டும், பறவைகள் தங்குவதற்கு விசாலமான வசதியுடனும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்த மாதம், இக்கூண்டு பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிகிறது.

காட்டு மாடு கூண்டு



அதேபோல், இப்பூங்காவில் 30க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் உள்ளன. அவை, இரண்டு கூண்டுகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கூண்டுகளின் தரை இறுக்கமாகவும், செடிகளும் முளைத்து வருகின்றன. இதனால், காட்டுமாடுகள் நடக்க சிரமப்படுகின்றன. எனவே, அந்த கூண்டுகளில், மண்ணை கொட்டி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்படி செய்வதால், காட்டு மாடுகள் சிரமமின்றி அங்கும், இங்கும் நடக்கும்.

நீர்யானை கூண்டு



இப்பூங்காவில், 5 பெண், 2 ஆண் என, ஏழு நீர்யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பிரகுர்த்தி என்ற பெண் நீர்யானை, எட்டு மாத கர்ப்பத்திற்கு பின், ஆக., 21ல் குட்டி ஈன்றது. பிறந்து எட்டு நாட்களில் அந்த குட்டி இறந்தது.

இச்சம்பவம், வனத்துறை அதிகாரிகள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 15 நாட்களாக, நீர்யானை கூண்டு, பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி மூடி வைக்கப்பட்டுள்ளது.

நீர்யானைகளை ஆண், பெண் என தனித்தனியாக பிரிக்கும் நடவடிக்கையாகவே மூடி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் அவற்றை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Advertisement