புது குடிநீர் இணைப்பு வழங்க 13ல் சிறப்பு முகாம்
கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம், அந்தந்த மண்டல அலுவலகங்களில், 13ம் தேதி (புதன்கிழமை) காலை, 10:30 மணி முதல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பத்துடன் சொத்து வரி ரசீது, சொத்து பத்திரம் நகல், மனுதாரர புகைப்படம் ஆகியவை இணைக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ரூ.125 செலுத்தி விண்ணப்பம் பெற வேண்டும். வீட்டு உபயோகத்துக்கான இணைப்பு பெறுவதற்கு, 5,000 ரூபாய் வைப்புத்தொகை, 3,000 ரூபாய் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, ரோட்டை வெட்டி, குழாய் பதித்து இணைப்பு வழங்குவதற்கான 'சென்டேஜ்' கட்டணம் கட்டட அமைவிடத்துக்கு ஏற்ப தொகை மாறுபடும். வணிக உபயோகத்துக்கான இணைப்பு பெற, வைப்புத்தொகை ரூ.10 ஆயிரம், சேவை கட்டணம் ரூ.7,500 மற்றும் 'சென்டேஜ்' கட்டணம் செலுத்த வேண்டும்.
அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளில் கட்டடம் கட்டியிருப்பவர்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு, அபிவிருத்திக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குரிய கட்டணங்களையும் சேர்த்து செலுத்தினால், விண்ணப்பம் பெறப்பட்டு, குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.