சூப்பர் ரிப்போர்டர் :
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சங்கிலி நகரில் வாறுகாலின்றி தேங்கி நிற்கும் கழிவுநீர், ரோடு வசதியில்லாததால் குண்டும் குழியுமான தெருக்கள், பொது கழிப்பறை வசதி இல்லை, பன்றிகள் தொல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதி சங்கிலி நகர் பகுதி.
நகர் உருவாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தெருக்களில் வாறுகால் வசதி இல்லை. வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டிற்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டி அதில் கழிவு நீரை விடுகின்றனர்.
கழிவு நீர் நிறைந்து தெருக்களில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மழைக்காலத்தில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து சுகாதார கேடாக உள்ளது.
ரோடுகள் இல்லாமல் தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. ஊராட்சி மூலம் குடிநீர் பொதுஅடிகுழாய் என எதுவும் இந்தப் பகுதியில் இல்லை. மக்கள் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்குகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் தண்ணீர் வரவில்லை. பொது கழிப்பறைகள் இல்லை.
ஊராட்சி கழிப்பறை இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள ஓடையில் பன்றிகள் கூட்டம் அதிகமாக சுற்றி திரிகிறது. சில சமயம் வீடுகளுக்கும் கூட புகுந்து விடுகிறது. பன்றிகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.