2ம் நாளாக தொடருது சுமைதுாக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 2 ம் நாளாக வேலை நிறுத்தம் செய்து வருவதால் ரேஷன் பொருட்கள் கொண்டு சொல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை காந்தி நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டி உள்ளது. இங்கிருந்து அரிசி, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும். இதற்கென கிட்டங்கியில் 20க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை அதிகாரிகள் வெளியூர் கிட்டங்கிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு வெளியூர்களில் பணியிட மாற்றம் செய்தால் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது எனவும், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், வெளியில் இருந்து பணியாட்களை வரவழைத்து சுமை தூக்க வைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ளும் திட்டத்தை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளது.

Advertisement