மயிலம் சார் பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மயிலம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.1.20 லட்சம் சிக்கியது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் நிர்ணயித்து இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார் நிலவியது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் நேற்று மாலை 6:30 மணியளவில் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து, சோதனை மேற்கொண்டனர். இரவு 8:15 மணிவரை நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது. இதுகுறித்து சார்பதிவாளர் வெங்கடேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில் 'பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.