ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் செயல்பாடு துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முதல் லிப்ட் செயல்பாடு துவங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கு 2 நடைமேடைகள் உள்ள நிலையில் காலை 8:30 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலும், மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயிலும் கிராசிங்கிற்காக நிறுத்தப்படுகிறது. இதேபோல் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் அவ்வப்போது இரண்டாவது நடைமேடையில் வந்து செல்கின்றன.
இதனால் இரண்டாவது நடைமேடைக்கு செல்ல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் லிப்ட் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வந்தது.
முழு அளவில் பணிகள் முடிந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் நேற்று காலை முதல் லிப்ட் செயல்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் இந்த லிப்ட்டுகள் இயங்கும். இதனைப் பயணிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.