செல்லங்கால் ஓடை தடுப்பணை அருகே கரை உடைப்பு: 3 மாதங்களாக கண்டு கொள்ளாத அதிகாரிகள்
கண்டமங்கலம்: மண்டகப்பட்டு செல்லங்கால் ஓடையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை அருகே உடைந்த கரைசீரமைக்காமல் 3 மாதங்களுக்கு லேமாகியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கண்டமங்கலம் ஒன்றியம், கொத்தாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிச்சேரியில் செல்லங்கால் ஓடையின் குறுக்கே ஆங்கிலேயேர்கள் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது.
ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் இந்த தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் பிரெஞ்சு வாய்க்கால் வழியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு ஏரி மற்றும் குளங்களுக்குச் சென்று நிரம்பும். தடுப்பணை நிரம்பி அதிகப்படியான தண்ணீர் செல்லங்கால் ஓடை வழியாக சென்று கடலில் கலக்கிறது.
இந்த ஓடையில் கண்டமங்கலம் ஒன்றியம், மண்டகப்பட்டு அருகே விவசாயிகள் பயன்பெறும் வகையில் 3 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை மற்றும் ஓடைக்கு மேற்கே 500 மீட்டர் நீளத்திற்கு கரைகள் பலப்படுத்தும் பணி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி அதே ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
மழைக் காலங்களில் இந்த ஓடைக்கு வடக்கே கிழக்கிலும், மேற்கிலும் நுாற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகும். இதனைத் தவிர்க்க தடுப்பணைக்கு கிழக்கே, திருபுவனை - கடலுார் சாலைக்கு அருகே செல்லங்கால் ஓடையில் கலக்கும் வகையில் ஓடையின் கரையில் பெரிய சிமென்ட் பைப் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்திற்கு முன் பெய்த கனமழையால் சிமென்ட் பைப்புக்கு இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டு, ஓடை கரை சேதம் அடைந்தது. 3 மாதங்களைக் கடந்தும் சேதமடைந்த கரை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழை தீவிரமடைந்தால், ஓடை வழியாக வரும் மழைநீர் விவசாய நிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.
எனவே, தடுப்பணை அருகே உடைந்த கரையை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.