இந்திய கடற்படையில் சேர்வதற்கு நவ.15க்குள் விண்ணப்பிக்கலாம் மீனவ இளைஞர்களுக்கு வாய்ப்பு

ராமேஸ்வரம்: இந்திய கடற்படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக மரைன் போலீசார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் பிளஸ் 2 முடித்த மகன், மகள்கள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், அறிவியலில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை சிறப்பு பயிற்சி கமுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் அளிக்கப்படும். விருப்பமுள்ள மீனவர்களின் வாரிசுகள் நவ.15க்குள் தமிழக மரைன் போலீஸ் ஸ்டேஷன், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

பயிற்சியின் போது மாணவர்களுக்கு உணவு, உடைகள், இருப்பிடம், பாடக் குறிப்பேடுகள், காலணிகள் ஆகியவற்றுடன் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை கடலோர மீனவர் சமூக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மரைன் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement